தமிழகத்தில் ஏ.ஐ., ஆய்வகங்கள் கூகுள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் ஏ.ஐ., ஆய்வகங்கள் கூகுள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 01, 2024 01:02 AM

சென்னை:அமெரிக்காவில், 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட்' நிறுவனங்களின் உயர் அலுவலர்களை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். கூகுள் நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசினார்.
முதலீடு செய்ய அழைப்பு
ஆப்பிள் நிறுவன உயர் அலுவலர்களிடம் முதல்வர் பேசுகையில், உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில், தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக, நன்றி தெரிவித்தார். இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் உள்ள தமிழகத்தில், ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் தயாரிக்கப்படும், 'பிக்சல் 8' போன்கள் உற்பத்தியை, மேலும் விரிவுப்படுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை, தமிழகத்தில் துவக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
'ஸ்டார்ட் அப்'கள், தொழில் துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத் திறன் ஆகியவற்றில், ஏ.ஐ., கண்டுபிடிப்புகள் வழியே வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் பேசினார்.
இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து, எதிர்காலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை, அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியுடன் தயார்படுத்த, தமிழகம் தயாராக உள்ளதாக, முதல்வர் தெரிவித்தார்.
ஒப்பந்தம்
முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து, தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவ, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மைக்ரோசாப்ட் உயர் அலுவலர்களை சந்தித்தபோது, 'டேட்டா சென்டர்' விரிவாக்கம், 'குளோபல் கேபபிளிட்டி சென்டர்', ஏ.ஐ., திறன் முயற்சிகளை உருவாக்குதல் உட்பட பல்வேறு வாய்ப்புகளில், முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டது.
தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு உடனிருந்தனர்.