பொம்மை தொழிலில் முதலீட்டை ஈர்க்க முன்னணி நிறுவனங்களுடன் அரசு பேச்சு
பொம்மை தொழிலில் முதலீட்டை ஈர்க்க முன்னணி நிறுவனங்களுடன் அரசு பேச்சு
ADDED : ஆக 01, 2024 01:34 AM

சென்னை:பொம்மை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட் கள் தொழிலில் முதலீட்டை ஈர்க்க, உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. இதற்காக சலுகைகள் வழங்கும் சிறப்பு திட்டம் ஒன்றை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்திய பொம்மை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களின் தேவையில் 80 சதவீதம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்யப்படுகிறது.
சீனாவிலிருந்து இறக்குமதியாவது மட்டும் 60 சதவீதம். இந்திய பொம்மைகள் சந்தை மதிப்பு 20,000 கோடி ரூபாயாக உள்ளது. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
மத்திய அரசு, உள்நாட்டு பொம்மை தொழிலை ஊக்குவிக்கும் வகையில், இறக்குமதி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், இந்திய பொம்மை இறக்குமதி குறைந்து, உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
சீனாவில் பொம்மை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, தங்களுடைய ஆலைகளை மாற்ற திட்டமிட்டு வருகின்றன.
எனவே, பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, முன்னணி நிறுவனங்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில், பொம்மை தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில், பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை துவங்குவதற்காக, உலகின் முன்னணி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, தமிழகத்தின் பாரம்பரிய கலை பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படும். இதற்காக, பொம்மை தொழிலுக்கு, சலுகைகள் உள்ளடக்கிய சிறப்பு திட்டத்தை அறிவிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.