ADDED : மே 07, 2024 06:43 AM

சென்னை : தமிழக அரசின், 'டான்செம்' எனப்படும், தமிழக சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம்; அரியலுார் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் உள்ளன.
அவற்றின் சிமென்ட் உற்பத்தித்திறன், ஆண்டுக்கு 17 லட்சம் டன். இந்நிறுவனம், வெளிச்சந்தையில், 'அரசு, வலிமை' ஆகிய பிராண்டுகளில், சிமென்ட் விற்பனை செய்கிறது.
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, அரசு நிறுவனத்தின் சிமென்ட் விலை சற்று குறைவு. இந்நிலையில் டான்செம் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, கடந்த ஆண்டில் குறைந்துள்ளது.
இதுகுறித்து, டான்செம் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமானத்திற்கு, சிமென்ட் தான் முக்கியம். எனவே, மக்கள் பயனடையும் வகையில், வெளிச்சந்தையில் சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தான், அரசு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.
அரசு சிமென்ட்ஸ், 2023 - 24ல், 14 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 18 லட்சம் டன்னாகவும்; அதற்கு முன், 12 லட்சம் டன்னாகவும் இருந்தது.
வெளிச்சந்தையில், கடந்த ஆண்டில் சிமென்ட் விலை குறைந்திருந்ததால், பலரும் தனியார் நிறுவனங்களின் சிமென்ட் வாங்கினர். எனவே, அரசு சிமென்ட் விற்பனை குறைந்தது.
தற்போது, தனியார் நிறுவனங்களின் சிமென்ட் மூட்டை, 260 ரூபாய் முதல், 320 ரூபாயாக உள்ளது. அரசு சிமென்ட் மூட்டை, 270 ரூபாயாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.