ரூ.20 லட்சம் வரை குறுந்தொழில் கடன் 'தாய்கோ' திட்டத்துக்கு அரசு அனுமதி
ரூ.20 லட்சம் வரை குறுந்தொழில் கடன் 'தாய்கோ' திட்டத்துக்கு அரசு அனுமதி
ADDED : செப் 03, 2024 02:29 AM
சென்னை:குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை துவக்க, 'தாய்கோ' வங்கிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அரசின், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி, தொழில் வணிக ஆணையரின் கீழ் செயல்படும் தேயிலை உட்பட, 250க்கும் மேற்பட்ட தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய தொழில் துவங்கவும், மூலதன செலவுகளுக்கும் கடன் வழங்குகிறது. இதுதவிர, தனிநபர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்களுக்கும் கடன்களை தாய்கோ வழங்குகிறது.
'குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்க, ஒரு நிறுவனத்திற்கு, 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்கு, 2024 - 25ல், 100 கோடி ரூபாய் தாய்கோ வங்கியால் ஒதுக்கப்படும்' என, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஜூனில் அறிவித்தார்.
இதை செயல்படுத்த, தொழில் வணிக ஆணையரகம், தாய்கோ வங்கிக்கு தற்போது அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடன் வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறை தயாரிக்கப்படுகிறது; விரைவில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் பணி துவங்கப்படும்; குறுந்தொழில் நிறுவனங்கள் சிரமமின்றி விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட இது உதவியாக இருக்கும்,” என்றார்.