தமிழக சுற்றுலா துறையில் முதலீட்டை ஈர்க்க சிறப்பு பிரிவை உருவாக்குகிறது 'கைடன்ஸ்'
தமிழக சுற்றுலா துறையில் முதலீட்டை ஈர்க்க சிறப்பு பிரிவை உருவாக்குகிறது 'கைடன்ஸ்'
ADDED : ஆக 14, 2024 11:46 PM

சென்னை: தமிழகத்தில் சுற்றுலா துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இத்துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு உதவ, சிறப்பு பிரிவை உருவாக்கும் பணியில் 'கைடன்ஸ்' எனும் வழிகாட்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சுற்றுலா துறையில் முதலீட்டை ஈர்க்க, தமிழக சுற்றுலா கொள்கை - 2023, கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த கொள்கை, சுற்றுலா துறைக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது. இதன் வாயிலாக, தொழில் துறை திட்டங்களை போல், சுற்றுலா மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்களில் முதலீட்டை ஈர்ப்பதே நோக்கம்.
அதன்படி, சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாசார சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, கூட்டங்கள், மாநாடு மற்றும் கண்காட்சி சுற்றுலா, மலை தோட்டப் பயிர் சுற்றுலா, பராம்பரிய சுற்றுலா உள்ளிட்ட, 12 முன்னுரிமை சுற்றுலா பிரிவுகளில் வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது.
அவற்றின் கீழ், பொழுதுபோக்கு பூங்கா, பாரம்பரிய ஹோட்டல், ஓய்வு விடுதி, மாநாட்டு கூடம், கடல்வாழ் உயிரின காட்சியகம், மலை தோட்டப் பயிர் பண்ணை சுற்றுலா உள்ளிட்ட கட்டுமான திட்டங்களில் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுற்றுலா துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், சுற்றுலா மற்றும் அதை சார்ந்த துறையில், 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையிலும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை கவரும் வகையிலும் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்கள் சுற்றுலா நுழைவு பகுதிகளாக உள்ளன. எனவே, சுற்றுலா தலங்களை ஒட்டிய பகுதிகளில் முதலீட்டை ஈர்க்கவும், அனைத்து உதவிகளை செய்யவும் சிறப்பு பிரிவு அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தனி பிரிவு துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.