ADDED : ஜூன் 27, 2024 12:39 AM

சென்னை:தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை, எளிய முறையில் விரைந்து மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஆலோசகரை தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் நியமிக்க உள்ளது.
தமிழகத்தில், மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் முகமையாக, 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனம் செயல்படுகிறது.
அதன்படி, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, ஒற்றைச்சாளர முறையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த அனுமதிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுத் தரும் பணியை மேற்கொள்கிறது. இந்த ஜனவரியில், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வழிகாட்டி நிறுவனம், சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது.
அதில் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக, 6.60 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. பல நிறுவனங்கள் தொழில்களை துவங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
எனவே, ஒற்றைச்சாளர முறையில் அரசு துறைகளின் அனுமதி பெற்றுத் தரும் விண்ணப்பத்தை எளிமையாக்குவது, மத்திய அரசின் வழிகாட்டுதலை கண்காணித்து, தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, வழிகாட்டி நிறுவனம், ஆலோசகரை நியமிக்க உள்ளது.
அதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது உள்ளதைவிட தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்கப்படும்.