'குஜராத், தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்'
'குஜராத், தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்'
ADDED : ஆக 17, 2024 11:34 PM

புதுடில்லி,:குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களே, இந்தியாவுக்கு அதிகஅளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதாகவும், மற்ற மாநிலங்கள் இவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் பன்னாட்டு நிதியத்தின் துணை நிர்வாக இயக்கு னர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
உலகளவிலான வினியோக தொடரில் முக்கிய பங்காற்றுவதற்கு, இந்தியாவுக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து பட்டியலிட்டு பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
சிறப்பான வணிக சூழல் கொண்ட மாநிலங்களின் தரவரிசையில் முன்னிலையில் இருப்பது; வணிகம் செய்வதற்கு ஏற்ற எளிமையான மற்றும் உகந்த சூழல்; குறைவான கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் குஜராத் மற்றும் தமிழகத்தில் அதிகளவில் அன்னிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
குறுகிய கால இலக்குகளைப் பொறுத்தவரை, தொழிலாளர் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானது. இதனை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வந்தாலும், மத்திய அரசு மட்டுமே முழுதுமாக கட்டுப்படுத்தாமல், மாநில அரசுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பொது மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் இதுவரை குறிப்பிட்ட அளவு முதலீடு செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.
எளிதாக வர்த்தகம் செய்ய ஏதுவாக, கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்த வேண்டும். அப்போது தான் உலகளவிலான வினியோக தொடரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும்.
இந்தியாவில் திறன் குறைபாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதனை சரி செய்வது மிகவும் முக்கியம். கல்வி, திறன், நிலம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதே நாட்டின் நீண்ட கால இலக்காக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

