ADDED : ஏப் 16, 2024 06:26 AM

புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதம் 0.53 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. காய்கறிகள் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து, வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: கடந்த மார்ச் மாதம், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.53 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது, கடந்த பிப்ரவரியில் 0.20 சதவீதமாகவும்; கடந்தாண்டு மார்ச்சில் 1.41 சதவீதமாகவும் இருந்தது. உணவுப்பொருள் பணவீக்கம் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 5.42 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், நடப்பாண்டு மார்ச்சில் 6.88 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு மார்ச்சில் காய்கறிகளில், மைனஸ் 2.39 சதவீதமாக இருந்த பணவீக்கம், நடப்பு மார்ச்சில் 19.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகள், குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக கச்சா எண்ணெய் பிரிவில் பணவீக்கம் அதிகரித்துஇருந்தது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

