ADDED : மார் 03, 2025 06:59 AM

புதுடில்லி : மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக், 301 கோடி ரூபாய்க்கு மேலான கடன் சுமையால் திவால் நிலையை எதிர்கொண்டு உள்ளது.
இந்தியாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹீரோ எலக்ட்ரிக், 301 கோடி ரூபாய்க்கு அதிகமான கடனால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதனால், திவால் நிலையை எதிர்கொண்டு உள்ள இந்நிறுவனம், ஏலத்திற்கு வரவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18ம் தேதி வெளியிடப்பட்டது.
ஏலத்திற்கு விண்ணப்பிக்க வருகிற 14ம் தேதி கடைசி நாளாகும். தகுதியான ஏலதாரர்களின் இறுதிப் பட்டியல் ஏப்ரல் 8ம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின், சவுதி முதலீட்டாளருடன் 1,000 கோடி ரூபாய் தொழில் முதலீட்டுக்கான பேச்சில் ஈடுபட்டிருந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது.
மேலும், மின்சார வாகனங்களுக்கான அரசு மானிய திட்டத்தின் இரண்டாம் பதிப்பில், தவறாக மானியங்களை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்காக அரசு விசாரணையை இந்நிறுவனம் எதிர்கொண்டது.
மேலும், நிறுவனத்தின் வளாகம் 'சீல்' வைக்கப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இது போன்ற அடுத்தடுத்த பல்வேறு காரணங்களால், ஹீரோ எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.