ADDED : ஜூன் 21, 2024 11:38 PM

புதுடில்லி:நாட்டில் இம்மாதம் வணிக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பணி நியமனங்களும் அதிகரித்துள்ளன.
எச்.எஸ்.பி.சி., வங்கி, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களின் ஒவ்வொரு மாத நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்த அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
சமீபகாலமாக இதற்கு முன்னோட்டமாக, 'பிளாஷ்' பி.எம்.ஐ., குறியீட்டையும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' நிறுவனம் திரட்டி வருகிறது.
பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு என்பது, ஒவ்வொரு மாதம் முடிந்த பிறகும் வெளியாகும் பி.எம்.ஐ., குறியீடுகளுக்கு முன்னோட்டமாக, 80 முதல் 90 சதவீத பதில்களின் அடிப்படையில், முன்கூட்டியே வெளியிடப்படுவதாகும்.
ஜூன் மாதத்துக்கான அறிக்கையில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:
நடப்பு ஜூன் மாதம், தயாரிப்பு துறை பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு 58.50 புள்ளிகளாகவும்; சேவைகள் துறை பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு 60.40 புள்ளிகளாகவும் அதிகரித்து உள்ளது. கடந்த மே மாதம் இத்துறைகளுக்கான பி.எம்.ஐ., குறியீடு முறையே, 57.50 புள்ளிகளாகவும்; 60.20 புள்ளிகளாகவும் இருந்தது.
வெப்ப அலை காரணமாக, கடந்த மாதம் நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், பி.எம்.ஐ., குறியீடு குறைந்திருந்தது. இந்நிலையில், இம்மாதம் தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் உற்பத்தியும்; புதிய ஆர்டர்களும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு ஜூன் மாதத்தில் பணியமர்த்தல்கள் அதிகரித்துள்ளன.
உள்ளீட்டு பொருட்களுக்கான பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணியாளர் மற்றும் மூலதன பொருட்களுக்கான செலவு அதிகரித்ததால், அதில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.