முக்கிய நகரங்களில் வீடு விற்பனை ஜூன் காலாண்டில் 5% உயர்வு
முக்கிய நகரங்களில் வீடு விற்பனை ஜூன் காலாண்டில் 5% உயர்வு
ADDED : ஜூன் 29, 2024 12:39 AM

புதுடில்லி:நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வீடுகள் விற்பனை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'அனராக்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனராக் தெரிவித்திருப்பதாவது:
ஏப்ரல் - ஜூன் காலாண்டில், ஏழு முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 1.20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 1.15 லட்சம் வீடுகளின் எண்ணிக்கையை விட, 5 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும், கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் விற்பனையான 1.30 லட்சம் வீடுகளின் எண்ணிக்கையை விட, 8 சதவீதம் குறைவாகும். இந்த சரிவுக்கு காரணம், கடந்த ஓராண்டில் விலை அதிகரிப்பே ஆகும்.
டில்லி தலைநகர் பகுதி, மும்பை பெருநகர் பகுதி, பெங்களுரூ, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வீடு விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. சென்னை மற்றும் கோல்கட்டாவில் சரிவு கண்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.