ADDED : மே 06, 2024 12:38 AM

பலவிதமான கிரெடிட் கார்டுகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்வது முக்கியமாகிறது.
நிதி வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் தவிர்க்க இயலாத அங்கமாகி இருக்கின்றன. பில் செலுத்துவது உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கிரெட் கார்டை பயன்படுத்துவது எளிதாக இருப்பதோடு, கேஷ் பேக் சலுகைகள், பரிசுப்புள்ளிகள் உள்ளிட்ட பலன்களும் கிடைக்கின்றன.
கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தினால், அதன் மூலம் சேமிப்பதும் சாத்தியம். எனினும் பலவிதமான பலன்களை கொண்ட பலவிதமான கார்டுகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்வது அவசியம்.
சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, பொருத்தமான கார்டை தேர்வு செய்வது சிக்கலாக அமையலாம்.
செலவு பழக்கம்
மேலும் கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. பொதுவாக கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் போது, ஒருவரின் செலவு பழக்கத்திற்கு ஏற்ப கார்டு அமைந்துள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
கார்டுகள் பலவித பலன்களை அளிக்கலாம். இந்த பலன்கள் கார்டுகளுக்கு இடையே மாறுபடலாம். ஆனால், செலவு பழக்கத்திற்கு பொருத்தமாக இல்லாத நிலையில், கார்டு பயன்பாடு எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக, ஒரு சில கார்டுகள் ரெஸ்டாரண்ட்களில் செலவிடும் போது அதிக பலன் அளிக்கலாம். வேறு சில கார்டுகள் எரிபொருள் பயன்பாட்டிற்கு பலன் அளிக்கலாம்.
அதிகம் வெளியே சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கு ரெஸ்டாரண்ட் புள்ளிகள் அளிக்கும் கார்டால் பயன் இருக்காது. அதே போல, வாகனம் இல்லாதவர்களுக்கு எரிபொருள் சலுகைகள் பயன் அளிக்காது.
எனவே, பயனாளிகள் முதலில் தங்களது செலவு பழக்கத்தை கவனித்து அதற்கேற்ற கார்டை தேர்வு செய்ய வேண்டும். அதே போல, கார்டை தேர்வு செய்யும் போது அதற்கான ஆண்டு கட்டணத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு சில கார்டுகள் கூடுதல் பலன் அளித்தாலும், அதற்கேற்ப ஆண்டு கட்டணமும் அதிகமாக இருக்கலாம். சலுகைகளும், கட்டணமும் பொருத்தமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
வட்டி விகிதம்
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் வட்டி விகிதம் முக்கியமானது. பில் தொகையை தாமதமாக செலுத்தும் போது வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டி விகிதத்தை கவனிக்காமல், சலுகைகள் அடிப்படையில் மட்டும் கார்டை தேர்வு செய்வது தவறாக அமைந்து விடும்.
எனவே கார்டுடன் தொடர்புடைய வட்டி விகிதங்களை கவனிக்க வேண்டும். கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர பலவித அறிமுக சலுகைகளை வழங்கலாம்.
இந்த சலுகைகள் ஈர்ப்புடையதாக அமைந்தாலும், கார்டின் மற்ற அம்சங்கள் ஏற்றதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அறிமுக சலுகைகளுக்காக மட்டும் கார்டை தேர்வு செய்வது தவறு.
எல்லா கார்டுகளும் நிபந்தனைகள், விதிமுறைகளை கொண்டிருக்கும். பொடி எழுத்துக்களில் இடம்பெறும் இவற்றை கவனமாக படித்துப்பார்த்து கார்டின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பட்ச தொகை, சலுகை காலம், அபராதம் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். கார்டு தொடர்பான பாதுகாப்பு அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும்.