எண்ணுாரில் 100 மெகாவாட் 'சோலார்' மின் நிலையம் அமைக்க யோசனை
எண்ணுாரில் 100 மெகாவாட் 'சோலார்' மின் நிலையம் அமைக்க யோசனை
ADDED : ஜூன் 06, 2024 02:17 AM

சென்னை:சென்னை எண்ணுார் மின் நிலையம் இருந்த இடத்தில், 100 மெகா வாட் திறனில் பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையத்தை அமைக்கலாம் என, மின் வாரிய பொறியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த எண்ணுாரில், மின் வாரியத்திற்கு சொந்தமான 450 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வந்தது. இது, கடந்த 1970 - 75ல் துவங்கப்பட்டது.
தன் ஆயுள் காலம் முடிந்தும் இம்மின் நிலையம் செயல்பட்டதால், 2017ம் ஆண்டு மார்ச் முதல், இங்குள்ள ஐந்து அலகுகளிலும் மின் உற்பத்தி நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள இயந்திரங்கள், தளவாடங்கள் அகற்றப்பட உள்ளன.
மொத்தம், 400 ஏக்கருக்கும் அதிகமாக உள்ள இந்த இடத்தில், 2,000 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்க மின் வாரியம் திட்டமிட்டது.
அங்கு எரிபொருளாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட உள்ளது. இதனால், 1 யூனிட் மின் உற்பத்தி செலவு, 10 ரூபாய் அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
எரிவாயு மின் நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான திட்டச் செலவு மற்றும் எரிபொருள் செலவு அதிகமாகும் என்பது உள்ளிட்ட காரணங்களால், இன்னும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து, மின் வாரிய பொறியாளர்கள் கூறியதாவது:
சென்னைக்கு அருகில் பல நுாறு ஏக்கரில் நிலம் இருப்பது அரிது. எனவே, எண்ணுார் அனல் மின் நிலையம் இருந்த இடத்தில், 100 மெகா வாட் திறனில் பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
இந்த பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க முடியும். அங்கு உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை, அரசு தலைமை செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்களுக்கு வினியோகம் செய்யலாம்.
சூரியசக்தி மின் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான பயிலகத்தையும் துவக்கினால், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

