தங்கம் விலை அதிகரிப்பால் இறக்குமதி 4 சதவீதம் சரிவு
தங்கம் விலை அதிகரிப்பால் இறக்குமதி 4 சதவீதம் சரிவு
ADDED : ஆக 15, 2024 10:21 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூலை காலக்கட்டத்தில், நாட்டின் தங்க இறக்குமதி 4.23 சதவீதம் குறைந்து, 1.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை நிர்ணயிப்பதில் தங்கம் இறக்குமதி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இறக்குமதி குறைந்துள்ளதால், பற்றாக்குறையும் குறையும்.
இதுகுறித்து, அரசு மேலும் தெரிவித்துள்ளதாவது: உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழலால், நாட்டின் தங்க இறக்குமதி, கடந்த ஏப்ரல் - ஜூலை காலக்கட்டத்தில், 4.23 சதவீதம் குறைந்து, 1.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 1.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஜூலை மாத தங்கம் இறக்குமதியை மட்டும் கணக்கிடும்பட்சத்தில், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 10.65 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கிடையே, ஏப்ரல் - ஜூலை காலக்கட்டத்தில், நாட்டின் வெள்ளி இறக்குமதி, 5,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 1,200 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டதால் இறக்குமதி குறைந்ததாகவும், விரைவில் பண்டிகை காலம் துவங்கவுள்ளதால், அடுத்த மாதம் முதலே இறக்குமதி மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சமீபத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததும், இறக்குமதி அதிகரிக்க வழிவகுக்கும் என்று தெரிவித்தனர்.