ADDED : பிப் 25, 2025 10:39 PM

திருப்பூர்:திருப்பூரில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, கேரளாவில் புதிய பனியன் யூனிட்டுகளை துவக்கி, பின்னலாடை உற்பத்தியில் கால்பதிக்க துவங்கிவிட்டனர்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவின் நிர்வாகிகள் கூறுகையில், 'ஆரம்பத்தில் திருப்பூரில் இருந்து தையல் இயந்திரங்களை மட்டும் வாங்கிச்சென்று, கேரளாவில் சிறிய யூனிட் துவக்கினர்.
தற்போது செயற்கை நுாலிழை பின்னல் துணியை வாங்கி, ஆடையாக வடிவமைத்து, உள்ளூர் சந்தையில் விற்கின்றனர்.
இதன் காரணமாக, திருப்பூர் வந்து ஆடை கொள்முதல் செய்வது குறைந்துவிட்டது. திருப்பூர் பருத்தி பின்னலாடைகளைக் காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை, 25 ரூபாய் அளவுக்கு விலை குறைவாகக் கிடைப்பதால், அங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது,' என்றனர்.
திருப்பூரில் செயல்படும் 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் இயக்குனர் 'வால்ரஸ்' டேவிட் கூறுகையில், ''சாயமிடப்பட்ட பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை பின்னல் துணி விற்பனை அதிகரித்துள்ளது.
கேரள தொழில்முனைவோர், 200 முதல், 250 ரூபாய் வரை மதிப்புள்ள துணிகளை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். அங்கு ஆண்டுக்கு ஆண்டு பின்னலாடை துறையின் வளர்ச்சி இரட்டிப்பாகி வருகிறது,'' என்றார்.

