ADDED : பிப் 23, 2025 12:17 AM

புதுடில்லி:வங்காள விரிகுடா பிராந்திய மீன் வள ஆலோசனை அமைப்பான, 'பி.ஓ.பி.பி.ஐ.ஜி.ஓ.,வின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிஉள்ளது.
இந்த அமைப்பு, வங்காள விரிகுடா பகுதியில் உள்ள நாடுகளின் மீன்வளத்துறை மேம்பாட்டுக்கான ஆலோசனை அமைப்பாகும். இது, கடந்த 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 13வது நிர்வாகக்குழு கூட்டம், மாலத்தீவின் மாலேயில் நடந்தது.
நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வரும் வங்கதேசத்திடம் இருந்து, தற்போது இந்தியா தலைமை பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, இலங்கை உள்ளன. இந்தோனேஷியா, மலேஷியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகியவை ஒத்துழைப்பு அளிக்கும் நாடுகளாக உள்ளன.
மீனவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் உறுப்பு நாடுகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

