காங்கேசன்துறை துறைமுகத்தை புதுப்பிக்க இந்தியா நிதியுதவி
காங்கேசன்துறை துறைமுகத்தை புதுப்பிக்க இந்தியா நிதியுதவி
ADDED : மே 01, 2024 12:24 AM

புதுடில்லி:இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை புதுப்பிக்க, இந்தியா நிதியுதவி வழங்க முடிவு செய்து உள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க, இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா முன்வந்துள்ளது.
கிட்டத்தட்ட 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம், பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து, 104 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இதனை செயல்படுத்துவதற்கான மொத்த செலவையும் இந்திய அரசே ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை, இலங்கை அமைச்சரவை கடந்த 2017ம் ஆண்டு மே மாதமே வழங்கிவிட்டது. அதன்பின், திட்ட மேலாண்மை ஆலோசகர் சேவைகளை வழங்குவதற்கான ஒப்புதலும், 2019 டிசம்பரில் வழங்கப்பட்டது.
எனினும், கடன் தொகையைக் காட்டிலும் திட்ட செலவு அதிகரிக்கும் என்று ஆலோசக சேவை நிறுவனம் தெரிவித்ததால், திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது இத்திட்டத்தை பொது - தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, மொத்தம் 510 கோடி ரூபாய் தேவைப்படும் என்று, கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.