'இந்தியா - ரஷ்யா வர்த்தக முன்னேற்றம் தற்காலிக நிகழ்வாக பார்க்கக்கூடாது'
'இந்தியா - ரஷ்யா வர்த்தக முன்னேற்றம் தற்காலிக நிகழ்வாக பார்க்கக்கூடாது'
ADDED : மே 17, 2024 10:03 PM

புதுடில்லி:புதுப் புது பொருளா தார வாய்ப்புகள் உருவாகி வருவதால், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு அதிகரித்து உள்ளதை, தற்காலிக நிகழ்வாக மட்டும் பார்க்கக்கூடாது என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாகவே இந்தியாவும், ரஷ்யாவும் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வருகின்றன. இதன் காரணமாகவே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காமல், இரு நாடுகளும் பேச்சு வாயிலாக, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியது.
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து, ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்திய நிலையில், ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் நீண்டகாலமாக ரஷ்யாவை அரசியல் மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் தான் அணுகி வந்துள்ளோம். ஆனால், தற்போது அங்கு பல்வேறு பொருளாதார வாய்ப்புகள் உள்ளன,” என தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு அதிகரித்துள்ளதை, தற்காலிக நிகழ்வாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டில் ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 33 சதவீதம் அதிகரித்து, 5.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா தலைமையிலான யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவுடனான முதலீட்டு ஒப்பந்தத்தில் முன்னேற்றம் காணவும் முயன்று வருகிறது. இரு நாடுகளும் இணைந்து, ராணுவ தளவாடங்களை தயாரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
நாம் நீண்டகாலமாக ரஷ்யாவை அரசியல் மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் தான் அணுகி வந்துள்ளோம்

