ADDED : பிப் 23, 2025 12:39 AM

குருகிராம்,:இந்திய ஆடை ஏற்றுமதியை அடுத்த நிதியாண்டில், புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்த இருப்பதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சுதிர் சேக்ரி தெரிவித்ததாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்திய ஆடை ஏற்றுமதி 1.12 லட்சம் கோடி ரூபாயை எட்டி, 11.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வரும் 2025- - 26ம் நிதியாண்டில், புதிய மற்றும் பாரம்பரியமற்ற சந்தைகளுக்கு இந்திய ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க, பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இறங்க, கவுன்சில் திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்பு திட்டம், மத்திய, மாநில அரசுகளின் வரி தள்ளுபடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை இத்துறையின் வளர்ச்சி வேகத்தை விரைவுப்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

