அமெரிக்க மந்தநிலை அச்சத்தால் சரியும் இந்திய ஐ.டி., துறை பங்குகள்
அமெரிக்க மந்தநிலை அச்சத்தால் சரியும் இந்திய ஐ.டி., துறை பங்குகள்
ADDED : மார் 13, 2025 11:43 PM

மும்பை:அமெரிக்க பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தால், இந்திய பங்கு சந்தையில், ஐ.டி., நிறுவனங்களின் பங்குகள் 22 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டு, கரடி சந்தைக்குள் நுழைந்துள்ளன.
பங்கு சந்தையை பொறுத்தவரை, எந்தவொரு நிறுவனத்தின் பங்கு அல்லது குறியீடு, சமீபத்திய உச்சத்தில் இருந்து 20 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டால், அது கரடி சந்தைக்குள் நுழைந்ததாக கருதப்படும்.
கடந்தாண்டு டிசம்பரில் 52 வார காலத்தில் புதிய உச்சம் தொட்ட நிப்டி ஐ.டி., குறியீடானது நேற்று வரை 22 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டு, கரடி சந்தைக்குள் நுழைந்துள்ளது.
நாட்டின் முன்னணி 10 ஐ.டி., நிறுவனங்களில், இன்போசிஸ், எச்.சி.எல்., டெக், டெக் மஹிந்திரா உள்ளிட்ட எட்டு நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ஐ.டி., நிறுவன பங்குகளின் தொடர் சரிவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் தாக்கம், அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்திய ஐ.டி., நிறுவனங்களின் மிகப்பெரிய சந்தையாக மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க வருமானத்தை அளித்து வரும் நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது.
அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு, இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி, நம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ் வளர்ச்சி குறித்து வெளியிட்ட பாதகமான கணிப்பு, பிற ஐ.டி., நிறுவன பங்குகளின் வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.