இந்தியாவின் இன்ஜின் தமிழகம் அமைச்சர் ராஜா பெருமிதம்
இந்தியாவின் இன்ஜின் தமிழகம் அமைச்சர் ராஜா பெருமிதம்
ADDED : ஆக 14, 2024 12:14 AM

சென்னை:''தமிழகத்தில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; அதை, மற்றவர்களிடம் கூச்சப்படாமல் பெருமையுடன் எடுத்துச் சொல்ல வேண்டும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா பேசினார்.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு, டி.வி.எஸ்., மொபிலிட்டி இணைந்து, மதுரையில் குறுந்தொழில்களுக்கு உதவக்கூடிய புத்தாக்க மையத்தை துவக்கியுள்ளன.
இதை, பிரதமர் மோடி, இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கி வைத்தார். மையத்தின் செயல்பாடுகளை அமைச்சர் ராஜா நேற்று, சென்னை கிண்டியில் துவக்கி வைத்தார்.
அமைச்சர் ராஜா பேசியதாவது:
உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், 45,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில், தமிழகத்தில் உள்ள பல்கலை, இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தான் முதலிடத்தில் உள்ளன.
இந்தியாவின் இன்ஜினாக தமிழகம் திகழ்கிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் தான் 45,000 தொழிற்சாலைகள், 50 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 9,000 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உள்ளன. தமிழக ஏற்றுமதியில் சிறு தொழில்களின் பங்கு, 40 சதவீதம்.
தமிழக நிறுவனங்கள் தரமான பொருட்களை தயாரிக்கின்றன. இதை மற்றவர்களிடம் கூச்சப்படாமல் பெருமையாக எடுத்துக் கூற வேண்டும்.
ஜவுளி துறையினரின் கோரிக்கையை ஏற்று, 'பேங்கிங்' வசதியுடன் கூடிய காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீரேற்று மின் திட்டங்களுக்கான தனி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் ஆலைக்கு, விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இவற்றால், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சி.ஐ.ஐ., முன்னாள் தலைவரும், புத்தாக்க மைய தலைவருமான தினேஷ் பேசும்போது, ''டி.வி.எஸ்., மொபிலிட்டி ஆதரவுடன், குறுந்தொழில்களுக்கு உதவும் வகையில், 'புதிய பயணம், வளர்ச்சியை நோக்கி' என்ற பெயரில் செயல்பாட்டை துவக்குகிறோம்,'' என்றார்.