'இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ரூ.10 லட்சம் கோடியாக உயரும்'
'இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ரூ.10 லட்சம் கோடியாக உயரும்'
ADDED : மே 25, 2024 01:53 AM

சென்னை:'இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி, ஆறாண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்' என, இந்திய மருந்து தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் வீரமணி பேசினார்.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் உள்ள இந்திய மருந்து தயாரிப்பாளர் சங்கங்களின் சார்பில், 'பார்மக் சவுத் 2024' எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் மருத்துவ பொருட்களின் கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
இதை, தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி துவக்கி வைத்தார்.
வளர்ச்சி அடையும்
இதில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர் ஜெயசீலன் பேசுகையில், 'இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, மருத்துவ பொருட்கள், மருந்துகள், மருத்துவம் மற்றும் சோதனைக்கூட கருவிகள், இயந்திரங்கள், மூலிகை மற்றும் அழகு சாதன பொருட்கள் சார்ந்த தயாரிப்பாளர்களுக்கும், வர்த்தகர்களுக்குமான உறவை மேம்படுத்தும் பாலமாக அமையும். இதனால், மருந்து துறை வளர்ச்சி அடையும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முன்னாள் தேசிய தலைவர் வீரமணி பேசியதாவது:
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தகம், சுதந்திரத்துக்குப் பின், 10 கோடி ரூபாயில் இருந்து, 1 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பார்மகோபியா கமிஷன் எனும் ஐ.பி.சி., உள்ளிட்டவற்றின் துணையுடன் இந்த வளர்ச்சியை எட்டி உள்ளோம்.
வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும். அடுத்த ஆறாண்டுகளில், ஏற்றுமதி 10.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்.
ஏற்றுமதி
நாம், 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறோம். அதில், 50 சதவீத ஜெனரிக் மருந்துகள் ஆப்ரிக்காவுக்கும், 40 சதவீத ஜெனரிக் மருந்து கள் அமெரிக்காவுக்கும், 25 சதவீத பொது மருந்துகளை பிரிட்டனுக்கும், 70 சதவீத தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்புக்கும் செல்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தென் மாநில மருந்து தயாரிப்பாளர் சங்க செயலர் சிவானந்தம், துணை தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

