கட்டுக்குள் வந்தது பணவீக்கம்; 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது
கட்டுக்குள் வந்தது பணவீக்கம்; 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது
ADDED : ஆக 13, 2024 06:43 AM

புதுடில்லி : நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில், 4 சதவீதத்துக்கும் கீழாக குறைந்து, ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் வந்து உள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு, இதுவே மிகக் குறைவாகும். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.44 சதவீதமாக இருந்தது.
கடந்த ஜூன் மாதம் 9.36 சதவீதமாக இருந்த உணவு பிரிவு பணவீக்கம், கடந்த மாதம் 5.42 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து பிரிவுகளிலும் பணவீக்கம் குறைந்தபோதிலும், காய்கறிகள், பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் ஆகிய பிரிவுகளே, ஒட்டுமொத்த பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தன.
பணவீக்கம், கிராமப்புறங்களில் 4.10 சதவீதமாகவும்; நகர்ப்புறங்களில் 2.98 சதவீதமாகவும் இருந்தது.
தொழில்துறை உற்பத்தி சரிவு
நாட்டின் தொழில் துறை உற்பத்தி, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில் 4.20 சதவீதமாக சரிந்துள்ளது. இது, கடந்த மே மாதம் 6.20 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஜூனில் 4 சதவீதமாகவும் இருந்தது.
மின்சாரம் மற்றும் சுரங்கத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த போதிலும்; தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சரிந்தது, ஒட்டுமொத்த வளர்ச்சி குறைய காரணமாக அமைந்தது.
கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு ஜூனில் சுரங்கத்துறை வளர்ச்சி 10.30 சதவீதமாகவும்; மின்சாரத் துறை வளர்ச்சி 8.60 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் தயாரிப்பு துறை வளர்ச்சி 2.60 சதவீதமாக சரிந்துள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 5.20 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வளர்ச்சி 4.70 சதவீதமாக இருந்தது.
மாறுகிறது கணக்கீடு
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் தொழில் துறை உற்பத்தி ஆகியவற்றை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு மாற்றங்கள், நடப்பு நிதியாண்டுக்குள் கொண்டு வரப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை கருத்தில் கொண்டே, குடும்பங்களின் நுகர்வு செலவு கணக்கெடுப்பு, முறை சாரா நிறுவனங்களின் ஆண்டு கணக்கெடுப்பு ஆகியவை நடப்பாண்டில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
நம் நாட்டில், பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை உற்பத்தி ஆகியவை, கடந்த 2011 - 12ம் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டும்; சில்லரை விலை பணவீக்கம் கடந்த 2012ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டும் கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், விரைவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், 2024ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, சில்லரை விலை பணவீக்கம் கணக்கிடப்படும் என்றும், மொத்த விலை குறியீட்டுக்கு மாற்றாக, உற்பத்தி விலை குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றும், அனைத்து குறியீடுகளுக்கும் ஒரே அடிப்படை ஆண்டை நிர்ணயிப்பதே திட்டம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.