இன்போசிசில் ஜி.எஸ்.டி., பிரச்னை: நிர்மலா தலையிட கோரிக்கை
இன்போசிசில் ஜி.எஸ்.டி., பிரச்னை: நிர்மலா தலையிட கோரிக்கை
ADDED : ஆக 02, 2024 01:00 AM

புதுடில்லி:சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், 2017 - 2022 காலக்கட்டத்தில், 32,403 கோடி ரூபாய் அளவில் சி.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் ஏய்ப்பு செய்துள்ளதாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. இது, இன்போசிஸ் தொடர்பான பிரச்னை மட்டுமல்ல; சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துக்குமான பிரச்னை என, எச்சரிக்கை மணி விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கர்நாடக ஜி.எஸ்.டி., ஆணையரகம் நோட்டீஸை திரும்ப பெற்றுவிட்டதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
எதனால் இந்த பிரச்னை?
இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகள் வைத்துள்ளன. ஜி.எஸ்.டி.,க்காக, அவை தனித்தனி நிறுவனங்களாக காட்டப்படுகின்றன. இதன் வாயிலாக, வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துக்கான செலவினங்களுக்கு, இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை.
வெளிநாட்டில் இருந்து சேவைகள் மிகவும் அரிதாகவே இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதற்கு வரி உண்டா என்பது நீண்டகாலமாகவே எழுப்பட்டு வரும் கேள்வி. இதுதான் பிரச்னைக்கான அடிப்படை.
ஜி.எஸ்.டி., தரப்பு வாதம்
'ரிவர்ஸ் சார்ஜ்' நடைமுறைகளின்படி, ஒரு குறிப்பிட்ட பொருளை வினியோகித்தவர் அல்லது சேவை அளித்தவர், வரி செலுத்தாத நிலையில், அந்த பொருளை அல்லது சேவையைப் பெற்றவர், வரி செலுத்த வேண்டும்.
அதன்படி, நம் நாட்டில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டில் உள்ள தன் கிளையிடம் இருந்து பெற்ற சேவைகளுக்கு, இந்தியாவில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் தான் வரி செலுத்த வேண்டும்.
கடந்த ஜூன், 26ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டில் உள்ளவர்களிடம் இருந்து சேவையைப் பெறும் நம் நாட்டில் உள்ள நிறுவனம், அதற்கான வரியைச் செலுத்த வேண்டும்.
அதன்படி, இந்தியாவில் உள்ள நிறுவனம், வெளிநாட்டில் உள்ள தன் கிளை அலுவலகத்திடம் இருந்து பெறும் சேவை அல்லது பொருளுக்கான இன்வாய்ஸ் எழுப்ப வேண்டும்.
அந்த பொருள் அல்லது சேவைக்கான முழு தொகையையும் இந்தியாவில் உள்ள நிறுவனமே ஏற்க வேண்டும்.
இன்போசிஸ் தரப்பு வாத ம்
கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டு கிளைகள், இந்தியாவில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செய்யும் சேவைகள், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வராது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதன் நிர்வாக மற்றும் நடைமுறை செயல்பாட்டு செலவினங்களுக்கு செய்யப்படும் முதலீடுகளுக்கு, இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை. நாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி விட்டோம் என தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து மேலும் பல நிறுவனங்களுக்கும் இது போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல் பரவி வருகின்றன.
இதையடுத்து, இத்துறையை குழப்ப மேகங் கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், இதில் தெளிவு ஏற்படுத்த உடனடியாக நிதியமைச்சர் தலையிட வேண்டும் என, கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
நோட்டீஸ் வாபஸ்
பிரச்னை பெரிதாகி வரும் நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை திருமப்பெற்றுக் கொள்வதாக கர்நாடக மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்துள்ளதாக, இன்போசிஸ் நிறுவனம் நேற்று பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகத்திடம் விளக்கமளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
-- நாஸ்காம்,
- மோகன் தாஸ் பாய்,