ADDED : செப் 10, 2024 11:15 PM

புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, கடந்த ஆகஸ்ட் மாதம் 3 சதவீதம் அதிகரித்து 38,239 கோடி ரூபாயாக இருந்தது என 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலையில் முதலீடு 37,113 கோடி ரூபாயாக இருந்தது.
எனினும், ஜூலையில் 1.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த முதலீடு, கடந்த மாதம் 1.08 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடன் சார்ந்த திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் பெருவாரியாக குறைந்ததே, கடந்த மாதம் மொத்த முதலீடுகள் குறைய காரணமாக அமைந்தது.
கடந்த ஜூலையில் கடன் சார்ந்த திட்டங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்டில் இது 62 சதவீதம் சரிந்து, 45,169 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த மாதத்துடன் சேர்த்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் நிகர மதிப்பு, 66.70 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டிஉள்ளது.
சீரான முதலீட்டு முறையான எஸ்.ஐ.பி., வாயிலாக ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 23,547 கோடி ரூபாயாக புதிய உச்சம் கண்டுள்ளது.