ADDED : மார் 05, 2025 11:20 PM

புதுடில்லி:வருவாய் வளர்ச்சி குறைவாக இருப்பதால், முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தக்க வைத்துக் கொள்ளும் ஊழியர்களின் எண்ணிக்கையுடன், கால அவகாசத்தை பாதியளவுக்கு குறைத்து உள்ளன.
இது குறித்து வேலைவாய்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது:
தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்கள், எந்தவொரு பணியும் ஒதுக்கீடு செய்யாத நிலையில், சம்பளத்துடன் ஊழியர்களை வைத்திருப்பது வழக்கம். திடீரென எழும் வாடிக்கையாளர் தேவையை சமாளிக்கும் வகையில், ஊழியர்கள் தக்க வைக்கப்படுவது வழக்கம். கடந்த 2020--21ம் நிதியாண்டுகளில், வருமான வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருந்த போது, ஐ.டி., நிறுவனங்கள், சராசரியாக 45 முதல் 60 நாட்கள் வரை ஊழியர்களை தக்க வைத்திருந்தன.
ஆனால், தற்போது நிலவும் நிச்சயமற்ற போக்குகளால், ஊழியர்களின் எண்ணிக்கையுடன், தக்க வைத்துக் கொள்ளும் சராசரி கால அவகாசம் 35 முதல் 45 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. வரும் 2025--26ம் நிதியாண்டிலும், இதே போக்கு தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.