ADDED : ஆக 22, 2024 01:25 AM

மும்பை:கடந்த மாதத்தில் நகைகள், ஆபரண கற்கள் ஏற்றுமதி 21.90 சதவிகிதம் வீழ்ச்சி கண்டதாக நகைக்கற்கள், நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் புவியியல்ரீதியான பிரச்னைகள் மற்றும் மத்திய கிழக்கு, உக்ரைன், இஸ்ரேல் பகுதிகளில் போர் நீடிப்பு ஆகியவை நகை, செயற்கைக் கற்களின் தேவையை குறைத்து விட்டதாக, கவுன்சிலின் தலைவர் விபுல் ஷா தெரிவித்தார். தங்க நகைகளின் ஏற்றுமதி 10.53 சதவிகிதம் சரிந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், இந்த மாதம் 9-13 வரை நடைபெற்ற இந்திய சர்வதேச நகை கண்காட்சியால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு நகை வர்த்தகம் நடந்ததாகவும் கம்போடியா, ஈரான், ஜப்பான், மலேசியா, நேபாளம், ரஷ்யா, சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த 50,000 பேர் அதில் பங்கேற்று ஆர்டர் அளித்ததாகவும் விபுல் ஷா தெரிவித்தார்.
இந்திய நகை மற்றும் செயற்கைக் கற்கள் ஏற்றுமதியில் புதிய நாடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காண கண்காட்சி உதவியதாகவும் அவர் கூறினார்.