ADDED : ஜூலை 02, 2024 11:09 PM

புதுடில்லி:'எல் அண்டு டி' நிறுவனம், கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை, 'சவுதி அராம்கோ' நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதையடுத்து, எல் அண்டு டி., பங்கு விலை, நேற்று 3 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.
சவுதி அரேபியாவை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ளது.
நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள், இந்நிறுவனத்திடம் இருந்து, இறக்குமதி செய்து வருகின்றன. சவுதி அராம்கோ ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரும் அளவில் முதலீடுகளை செய்துள்ளது.
இந்நிறுவனம் கிட்டத்தட்ட 9 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், சவுதி அரேபியாவில் எரிவாயு திட்டம் ஒன்றை திட்டமிட்டுள்ளது. தற்போது இத்திட்ட விரிவாக்கத்திற்காக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை, எல் அண்டு டி., நிறுவனத்தின் துணை நிறுவனம் பெற்றுள்ளது.
இதையடுத்து, எல் அண்டு டி., நிறுவனத்தின் பங்கு விலை, நேற்றைய மும்பை பங்கு சந்தை வர்த்தக நேரத்தில், 3 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 3,634 ரூபாயாக இருந்தது.