ADDED : மார் 06, 2025 11:15 PM

ஹைதராபாத்:தெலுங்கானாவில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி ஆலையாக இருக்கக்கூடும் என கருதப்படும் ஆலையை, லென்ஸ்கார்ட் நிறுவனம் அமைக்கிறது.
கடந்தாண்டு டிசம்பரில் புதிய ஆலை அமைப்பது தொடர்பாக தெலுங்கானா அரசுக்கும் லென்ஸ்கார்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஹைதராபாத் அடுத்த டக்குகுடாவில் அமைய உள்ள புதிய ஆலைக்கான கட்டுமானப் பணிக்கு, மாநில ஐ.டி.,மற்றும் தொழில்துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு நேற்று அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
இது குறித்து அம்மாநில தொழில்துறை மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:
புதிய ஆலை வாயிலாக கிட்டத்தட்ட 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். லென்ஸ்கார்ட் ஆலையில் தயாரிக்கப்படும் கண்ணாடி தயாரிப்புகள், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து, தைவான், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இரண்டு ஆண்டுகளில் வணிகரீதியான உற்பத்தியை துவங்கும். முழுமையான உற்பத்தி நான்கு ஆண்டுகளில் துவங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.