ADDED : ஜூன் 25, 2024 10:27 PM

புதுடில்லி : ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காப்பீடு பாலிசிகளை வாங்கிக் கொள்வதாக, பாலிசிதாரர்களை ஏமாற்றும் நோக்கில் சில நிறுவனங்கள் அழைப்பு விடுத்து வருவதாகவும்; இது குறித்து பாலிசிதாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எல்.ஐ.சி., நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, எல்.ஐ.சி., மேலும் தெரிவித்துள்ளதாவது: எல்.ஐ.சி.,யிடம் பாலிசிகளை சரண்டர் செய்வதற்கு பதிலாக, அந்த பாலிசிகளை தங்களிடம் கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாக சில நிறுவனங்கள் பாலிசிதாரர்களை அணுகி வருகின்றன. இவை போன்ற நிறுவனங்களுக்கும், எல்.ஐ.சி., நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. மேலும், இது சம்பந்தமாக எல்.ஐ.சி.,யின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூறும் கருத்துகள், அவர்களுடைய சொந்த கருத்தாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.
காப்பீடு சட்டத்தின் விதிமுறைகளின்படி மட்டுமே, எல்.ஐ.சி., காப்பீடு பாலிசிகளின் விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும்.
அதற்கு மாறாக நடைபெற்றிருந்தால், அதை நிராகரிக்கக் கூடிய உரிமை எல்.ஐ.சி., நிறுவனத்துக்கு உள்ளது.
பாலிசிதாரர்களை ஏமாற்றும் நோக்கில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன், அருகிலுள்ள எல்.ஐ.சி., கிளையில் இருக்கும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி.,யிடம் பாலிசிகளை சரண்டர் செய்வதற்கு பதிலாக, அவற்றை தங்களிடம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக சில நிறுவனங்கள் கூறுகின்றன

