தென் ஆப்ரிக்காவில் புதிய ஆலை ஆய்வில் இறங்கியது மஹிந்திரா
தென் ஆப்ரிக்காவில் புதிய ஆலை ஆய்வில் இறங்கியது மஹிந்திரா
ADDED : பிப் 27, 2025 11:08 PM

கேப்டவுன்:மஹிந்திரா நிறுவனம், தென் ஆப்ரிக்காவில் புதிய ஆலையை அமைப்பதற்கு தேவையான ஆய்வை மேற்கொள்ள, அந்நாட்டு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இறக்குமதியாகும் உதிரிபாகங்களை அசெம்பிள் செய்வதற்காக, இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே அந்த நாட்டின் குவாஜுலுா நடல் மாகாணத்தில், மஹிந்திரா நிறுவனம் கடந்த 2018ல் ஆலை அமைத்தது. அந்த ஆலையில் 25,000 வாகனங்கள் உற்பத்தி ஆன நிலையில், புதிய ஒப்பந்தம் தற்போது செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, தென் ஆப்ரிக்க வாகனத் துறைக்கான மானியம், ஏற்றுமதி திறன் மற்றும் வினியோக சங்கிலி உள்கட்டமைப்பு ஆகியவை ஆய்வு செய்யப்படும். கூடுதலாக, பணியாளர் மேம்பாட்டு வாய்ப்புகள், தளவாட வசதி மற்றும் ஆலை அமைக்க தகுதியான இடம் ஆகியவற்றை கண்டறியவும் இந்த ஆய்வு உதவியாக இருக்கும். இங்கு, மின்சார வாகன உற்பத்திக்கான தகுந்த சூழல் உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
இங்கு ஆலை அமைப்பதற்கான முழு உத்தரவாதம் வழங்குவதாக மஹிந்திரா நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை. ஆய்வுக்கு பின், முதலீடு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.