தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
ADDED : ஏப் 02, 2024 11:22 PM

புதுடில்லி:இந்தியாவின் தயாரிப்புத்துறை, கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மார்ச் மாதத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வலுவான தேவை காரணமாக புதிய ஆர்டர்கள் அதிகரித்ததே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பின், மார்ச் மாதத்தில் தான் உற்பத்தியும், புதிய ஆர்டர்களும் வலுவான உயர்வை பதிவு செய்துள்ளன.
'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான எஸ் அண்டு பி., - பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மார்ச் மாதத்தில் 59.10 புள்ளிகளாக இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பின், 16 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சமாகும். இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் பி.எம்.ஐ., குறியீடு, 56.90 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மார்ச் மாதத்துடன் சேர்த்து, தொடர்ந்து 33 மாதங்களாக இக்குறியீடு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
புதிய ஏற்றுமதி ஆர்டர்களும், கடந்த 2022 மே மாதத்திற்கு பின் அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த காரணத்தால் பொருட்களை அதிகளவில் வாங்கி வைத்தனர்.
வேலைவாய்ப்பை பொறுத்தவரை, முந்தைய இரண்டு மாதங்களில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், கடந்த மாதம் நிறுவனங்கள் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தினர். நாட்டின் தயாரிப்புத் துறையின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து, ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள் நம்பிக்கையுடனேயே இருந்தன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

