ADDED : மே 22, 2024 11:17 PM

புதுடில்லி:எவரெஸ்ட் மற்றும் எம்.டி.எச்., நிறுவனங்களின் மசாலாப் பொருட்களின் மாதிரிகளில், எத்தீலின் ஆக்சைடு இருந்ததற்கான எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்திருப்பதாவது: கடந்த மாதம், இந்தியா வின் எவரெஸ்ட் மற்றும் எம்.டி.எச்., மசாலா நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்தீலின் ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறி, இந்நிறுவன பொருட்களுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இம்மசாலாப் பொருட்களின் மாதிரிகள், இந்தியா முழுதும் இருந்து, கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் சேகரிக்கப்பட்டது. மேலும், உற்பத்தி ஆலைகளிலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், வினியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த மசாலாப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதுவரை சோதிக்கப்பட்ட 28 ஆய்வகங்களில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளின்படி, இந்த இரு நிறுவனங்களின் மசாலாப் பொருட்களின் மாதிரிகளில், அதிகளவு பூச்சிக் கொல்லி பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இதே போன்று, மற்ற பிராண்டுகளின் 300க்கும் மேற்பட்ட மசாலா மாதிரிகளின் சோதனையிலும், பூச்சிக் கொல்லி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

