உயர் தொழில்நுட்ப பொறியாளர்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தேவை
உயர் தொழில்நுட்ப பொறியாளர்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தேவை
ADDED : ஜூலை 15, 2024 02:24 AM

புதுடில்லி,:நம் நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்து வருவதால், தொழில்நுட்பத் துறையில் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கான தேவை உள்ளதாக, 'நாஸ்காம்' வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
நாஸ்காம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில், அடுத்த 2 - 3 ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கான தேவை உள்ளது. அரசு, விரைவில் கல்வித் தரத்தையும், திறன் பயிற்சியையும் மேம்படுத்தவில்லையென்றால், உயர் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய இயலாது.
நம் நாட்டின் திறன் குறைபாட்டுக்கு, மோசமான பள்ளிக் கல்வி அமைப்பே முக்கிய காரணம். கல்லுாரிகளும் வேலைவாய்ப்புக்கு தேவை யான நடைமுறை திறன்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுஇல்லை.
தற்போது 25 சதவீதமாக உள்ள டிஜிட்டல் திறனுக் கான தேவை - வினியோக இடைவெளி, வரும் 2028ம் ஆண்டில், 29 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்லுாரி முடித்த புதிய பட்டதாரிகளைக் கொண்டு, உயர் தொழில்நுட்ப பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். தற்போது தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் உள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து, திறன் பயிற்சி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்புவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இதற்கு நிறுவனங்களிடமிருந்தும் அதிக உழைப்பு தேவைப்படும். ஒருமுறை திறன் பயிற்சி அளிப்பதோடு நிறுவனங்களின் கடமை முடிந்து விடாது. தொழில்நுட்பம் மாற்றம் பெற்றுக் கொண்டே வருவதால், தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
கல்லூரி முடித்த புதிய பட்டதாரிகளைக் கொண்டு, உயர் தொழில்நுட்ப பணியிடங்களில், 25 சதவீத பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.