ஐபோன் உதிரிபாக தொழிற்சாலை தமிழகத்தில் அமைக்கிறது 'மதர்சன்'
ஐபோன் உதிரிபாக தொழிற்சாலை தமிழகத்தில் அமைக்கிறது 'மதர்சன்'
ADDED : ஆக 07, 2024 01:54 AM

புதுடில்லி:வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'மதர்சன்' குழுமம், 'ஐபோன்' உதிரிபாகங்கள் தயாரிக்க, தமிழகத்தில் தயாரிப்பு ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது.
இதையடுத்து, 'டாடா' குழுமத்துக்கு அடுத்தபடியாக, 'ஆப்பிள்' நிறுவனத்தின் வினியோக தொடரில் இணைந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது பெரிய குழுமமானது மதர்சன்.
ஐபோனுக்கு தேவையான கண்ணாடி திரைகளை தயாரிக்க, கிட்டத்தட்ட 2,000 முதல் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், மதர்சன், தமிழகத்தில் ஆலை அமைக்க உள்ளது.
இதற்காக ஹாங்காங்கைச் சேர்ந்த 'பி.ஐ.இ.எல்., கிரிஸ்டல்' எனும் நிறுவனத்துடன் இணைந்து, இந்த ஆலையை அமைக்க இருக்கிறது. இதில் 51 சதவீதத்துடன், பெரும்பான்மை பங்குகளை மதர்சன் குழுமம் வைத்திருக்கும்.
பி.ஐ.இ.எல்., கிரிஸ்டல் நிறுவனம், தற்போது ஐபோன்களுக்கான மூன்றில் இரண்டு பங்கு கண்ணாடி திரைகளை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உலகளவில் புவிசார் அரசியல் பிரச்னைகள் அதிகரித்து வருவதால், ரிஸ்க்குகளை குறைக்கும் விதமாக, தனக்கு உதிரி பாகங்கள் வழங்கும் நிறுவனங்களிடம் தயாரிப்பு ஆலைகளை விரிவுபடுத்துமாறு, ஆப்பிள் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து இந்தியா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு தயாரிப்பு ஆலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே, தற்போது தமிழகத்தில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் துவங்கப்பட உள்ள இந்த ஆலை, செயல்பாட்டுக்கு வந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் 8,000 முதல் 8,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலையின் நுகர்வோர் மின்னணுவியல் பிரிவு, நடப்பு காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அடுத்தாண்டு பிற்பாதியில் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.