ADDED : ஏப் 17, 2024 08:10 PM

புதுடில்லி:'நானோ யூரியா பிளஸ்' எனும் புதிய உரம் குறித்த விபரக் குறிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது.
'இப்கோ' எனும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நானோ யூரியா பிளஸ் எனும் புதிய உரம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் குறித்த விபரக் குறிப்பை அரசு தற்போது வெளியிட்டு உள்ளது.
இது குறித்து, இப்கோ நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அவாஸ்தி, தன் 'எக்ஸ்' சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நானோ யூரியா பிளஸ் என்பது, நானோ யூரியாவின் மேம்பட்ட வடிவமாகும். மண் ஆரோக்கியம், விவசாயிகளின் லாபம் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, வழக்கமான யூரியா மற்றும் பிற நைட்ரஜன் உரங்களுக்குப் பதிலாக இது பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பதிவிட்டுஉள்ளார்.
உலகின் முதல் நானோ திரவ யூரியா உரத்தை, இப்கோ கடந்த ஜூன் 2021ல் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, நானோ டி.ஏ.பி., எனும் மற்றொரு உரத்தை, கடந்த ஆண்டு ஏப்ரலில் இப்கோ அறிமுகம் செய்தது.
திரவ வடிவிலான இந்த உரம், பயிர்களின் முக்கிய வளர்ச்சி கட்டங்களில், நைட்ரஜன் தேவைகளை பூர்த்தி செய்யும்.

