ADDED : ஜூன் 27, 2024 12:48 AM

மும்பை:மும்பையில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான, 'மசகான்' கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு, மத்திய அரசின் 'நவரத்னா' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள மசகானில், 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இது பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்திய கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவை இங்கு தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிறுவனத்துக்கு, 'நவரத்னா' அந்தஸ்து தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் பெறும் இந்தியாவின் 18வது பொதுத்துறை நிறுவனம் இதுவாகும்.
இந்த தகுதியை பெற்றதன் வாயிலாக, மத்திய அரசின் ஒப்புதலின்றி, 1,000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் பெறுகிறது.
கூடுதலாக, இந்நிறுவனம், அதன் நிகர மதிப்பில் 30 சதவீதம் வரை, பிற நிறுவனங்களில் முதலீடு செய்யும் அதிகாரத்தையும் பெறுகிறது.