உங்கள் நிதி திட்டமிடல் உத்திகளில் மாற்றம் தேவையா ?
உங்கள் நிதி திட்டமிடல் உத்திகளில் மாற்றம் தேவையா ?
ADDED : ஏப் 01, 2024 12:42 AM

நிதி ஆரோக்கியத்தை அறியவும், முதலீடுகள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்துள்ளனவா என்பதை அறியவும், புதிய நிதியாண்டு வாய்ப்பாக அமைகிறது.
புத்தாண்டு போலவே, புதிய நிதியாண்டின் துவக்கமும் நிதி திட்டமிடலை மேம்படுத்திக் கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பாக அமைகிறது. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நிதி திட்டமிடலில் மாற்றங்கள் தேவையா என்பதை தீர்மானிக்கவும் இது உதவுகிறது.
கடந்த நிதியாண்டில் ஆதிக்கம் செலுத்திய நிதி போக்குகளையும் மனதில் கொண்டு எதிர்கால பாதையை வகுத்துக் கொள்ளலாம். நிதி இலக்குகளுக்கான பாதையை மேலும் சீராக்க, நிதி திட்டமிடலை ஆய்வு செய்து, பொருத்தமான உத்திகளை அமைத்துக் கொள்ளும் வழிகளை பார்க்கலாம்.
நிதி நிலை
நிதி திட்டமிடல் பரிசீலனையை, தற்போதைய நிதி நிலை ஆய்வில் இருந்து துவக்கலாம். முக்கியமாக காப்பீடு பாதுகாப்பு போதுமானதாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு இரண்டிற்கும் இது பொருந்தும். நிதி பொறுப்புகள், அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள கடன்கள், குடும்ப உறுப்பினர்களின் நிதி தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவை எனில் காப்பீடு திட்டத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
மருத்துவ காப்பீடு பாலிசியை பொருத்தவரை, நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை நன்றாக அறிந்திருப்பது அவசியம். பாலிசிகளில் விலக்குகள் மற்றும் வரம்புகள்இருக்கலாம்.
இந்த வரம்புகள் காப்பீடு பாதுகாப்பையும் பாதிக்கலாம். எனவே, மாறி வரும் சூழலுக்கு ஏற்ப காப்பீடு அம்சங்கள் இருக்கின்றனவா என கவனிக்க வேண்டும். பிரிமியம் தொகை அட்டவணை போன்றவற்றையும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. வாழ்க்கையின் முன்னுரிமைகளின் தேவைக்கு ஏற்ப காப்பீடு பாதுகாப்பு அமைந்திருப்பது முக்கியம்.
முதலீடு வாய்ப்புகள்
இதே போலவே முதலீடுகளின் செயல்பாடுகளையும், கடன் பொறுப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். முதலீடுகள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதலீடு தொகுப்பின் அமைப்பில் மாற்றம் தேவையா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.
நிதி உலகில் அறிமுகம் ஆகியிருக்கும் புதிய போக்குகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். முதலீடுகள் அளிக்கும் பலனை தீர்மானிக்கும் பொருளாதார காரணிகளையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப மாற்றம் தேவையா என தீர்மானிக்க வேண்டும்.
கடன் பொறுப்புகள் இருந்தால், கடன் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக்கடன் பெற்றவர்கள் அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே அடைப்பதற்கான வாய்ப்பை பரிசீலிக்கலாம். ஓய்வூதிய திட்டமிடலையும் மறந்துவிடக்கூடாது.
புதிய நிதி இலக்குகளை நிறைவேற்றும் தேவையும், சாத்தியமும் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
விடுமுறை கால பயணம் போன்ற வாழ்வியல் சார்ந்த இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வது உற்சாகம் அளிக்கலாம். முக்கியமாக வரி திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே வரி சேமிப்புகள் இருந்தால் அவற்றின் பலனை ஆய்வு செய்ய வேண்டும்.
வரி திட்டமிடலை இதுவரை மேற்கொள்ளவில்லை எனில், அதற்கான சரியான தருணம் இது. சரியான வரி திட்டமிடல் மூலம், வரி சேமிப்பு முதலீடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளலாம். முக்கியமாக கடைசி நேர முதலீடுகளை அவசரத்தில் மேற்கொள்வதை தவிர்க்கலாம்.

