தோல் திடக்கழிவிலிருந்து பொருட்கள் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்
தோல் திடக்கழிவிலிருந்து பொருட்கள் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்
ADDED : ஆக 06, 2024 07:35 AM

சென்னை : தோல் பொருட்கள் தயாரிப்பின் போது வெளியேறும் திடக்கழிவில் இருந்து, பல்வேறு வகை தோல் பொருட்கள் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை, மத்திய அரசின் சி.எல்.ஆர்.ஐ., உருவாக்கியுள்ளது. இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிடைக்கும் 7 லட்சம் டன் கச்சா தோலில், 2 லட்சம் டன் அளவுக்கு தான், பல்வேறு தோல் பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுகின்றன. மீதி, 5 லட்சம் டன் தோல் திடக்கழிவாக வெளியேறுகிறது. இவ்வாறு தோல் பொருட்கள் தயாரிப்பின்போது வெளியேற்றப்படும் தோல் திடக்கழிவுகளை அப்புறப்படுத்த, சிலர் தீ வைத்து எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் மாசடைகிறது.
சென்னை கிண்டியில் சி.எஸ்.ஐ.ஆர்., - சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம், 'ஜெனோகோரியம்' என்ற பெயரில் தோல் திடக்கழிவில் இருந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட தோல் பொருட்கள் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து, சி.எல்.ஆர்.ஐ., முதன்மை விஞ்ஞானி ப.சரவணன் கூறியதாவது:
தோல் திடக்கழிவை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தோல் மாதிரி பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக, ம.பி., மாநிலம், தேவாசில் உள்ள, 'டாடா இன்டர்நேஷனல் லெதர்' நிறுவனம், சி.எல்.ஆர்.ஐ.,யிடம் ஆலோசனை கேட்டது.
இரு நிறுவனங்களும் இணைந்து, தற்போது, தோல் திடக்கழிவில் இருந்து, தோல் மாதிரி பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்காத
இந்த தொழில்நுட்பத்திற்கு டாடா, சி.எல்.ஆர்.ஐ., இரண்டும் இணைந்து காப்புரிமை பெற்றுள்ளன. டாடா லெதர் நிறுவனம், 'பீனிக்ஸ்' என்ற பெயரில் இந்த பொருட்களை தயாரித்து, சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
வீணாகும் தோல் திடக்கழிவை பயன்படுத்தி, ஆண்டுக்கு, 12,500 கோடி ரூபாய் மதிப்புள்ள தோல் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீணாகும் தோல் திடக்கழிவை பயன்படுத்தி ஆண்டுக்கு, 12,500 கோடி ரூபாய் மதிப்பிலான தோல் பொருட்களை தயாரிக்கலாம்