ADDED : மே 31, 2024 12:09 AM

சென்னை:தமிழகத்தில், துறை வாரியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன தொழிற்சாலைகள் உள்ளன என்ற விபரம் அடங்கிய, 'டேட்டா' எனப்படும் தகவல் தொகுப்பை தொழில் துறை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு மாநிலம் முழுதும், 28 தொழில் பூங்காக்கள் உள்ளன. அவற்றில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெரிய நிறுவனங்களின், 3,142 தொழிற்சாலைகள் உள்ளன.
இதுதவிர, தாங்கள் விரும்பும் இடங்களில் நேரடியாக நிறுவனங்கள் ஆலைகளை அமைக்கின்றன. தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகள், எங்கெங்கு உள்ளன என்ற துல்லிய விபரம் தொழில் துறையிடம் இல்லை என, தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில் துவங்க வரும் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், ஒற்றை சாளர முறையில் பல துறைகளின் அனுமதியை பெற்று தருகிறது. சில நிறுவனங்கள், அந்த பணியையும் தாங்களே செய்து கொள்கின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன தொழிற்சாலைகள் உள்ளன என்ற தொழிற்சாலைகள் தொடர்பான விபரங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகங்களில் என பல இடங்களிலிருந்து பெறப்படுகின்றன.
எனவே, அனைத்து துறைகளையும் உள்ளடக்கி, ஒவ்வொரு துறையிலும் என்னென்ன தொழிற்சாலைகள் உள்ளன, அவை எந்தெந்த இடத்தில் உள்ளன, ஒவ்வொரு ஆலையிலும் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என, மாவட்ட வாரியாக, டேட்டா உருவாக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்கும், ஏற்ப புதிய திட்டங்கள், கொள்கைகளை எளிதாக வகுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.