'யுனிகார்ன்' நிறுவனங்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் முதல் முறையாக சரிவு
'யுனிகார்ன்' நிறுவனங்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் முதல் முறையாக சரிவு
ADDED : ஏப் 11, 2024 01:21 AM

மும்பை: 'யுனிகார்ன்' நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்து உள்ளதாக, 'ஹூருன் குளோபல் யுனிகார்ன் இண்டெக்ஸ் 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கிட்டத்தட்ட 8,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்த நிலையில், முதன்முறையாக, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. முன்னதாக 68 ஆக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 67 ஆகக் குறைந்துள்ளது. எனினும், உலகில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட மூன்றாவது நாடு என்ற அந்தஸ்தை, இந்தியா இன்னும் தக்க வைத்துள்ளது.
'பைஜூஸ்' நிறுவனத்தின் மதிப்பு, ஓராண்டுக்கு முன்பு, கிட்டத்தட்ட 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பின் நிறுவனம் சிக்கலில் மாட்டியதை அடுத்து, அதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 8,300 கோடி ரூபாய்க்கும் கீழாக குறைந்தது.
இது, உலகிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்ட அதிகபட்ச மதிப்பு சரிவாகும்.
கிட்டத்தட்ட 66,400 கோடி ரூபாய் மதிப்புடன், 'ஸ்விக்கி' மற்றும் 'டிரீம்11', இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க யுனிகார்ன் நிறுவனங்களாக உள்ளன. உலகளாவிய பட்டியலில், இவை 83வது இடத்தில் இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக, 'ரேசர்பே' நிறுவனம், கிட்டத்தட்ட 62,250 கோடி ரூபாய் மதிப்புடன், 94வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டில், அமெரிக்காவில் 60, சீனாவில் 30 செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இப்பிரிவில் வெகுசில நிறுவனங்கள் மட்டுமே துவக்கப்பட்டுள்ளன.
உலகளவில் யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 1,453 ஆக உள்ளது. இவற்றில் அமெரிக்காவில் 703, சீனாவில் 340 நிறுவனங்கள் உள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் 70 நிறுவனங்களும், சீனாவில் 56 நிறுவனங்களும் புதிதாக யுனிகார்ன் லிஸ்டில் சேர்ந்துள்ளன.
இந்தியர்கள் உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும், தங்கள் நிறுவனங்களை அமைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 67 யுனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் அமைத்தவை 109 ஆக உள்ளன. இது, உள்நாட்டின் யுனிகார்ன் வளர்ச்சி வாய்ப்பை பாதிப்பதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக மதிப்புடைய யுனிகார்ன்கள்
நிறுவனம் மதிப்பு (ரூபாய் லட்சம் கோடியில்)
1) பைட் டேன்ஸ் 18.26
2) ஸ்பேஸ் எக்ஸ் 14.94
3) ஓப்பன் ஏ.ஐ., 8.30

