ஒரு லட்சம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் உற்பத்தி பாதிப்பு
ஒரு லட்சம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் உற்பத்தி பாதிப்பு
ADDED : மே 10, 2024 04:04 AM

ஈரோடு : ஓட்டு போட சென்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானம் துவங்கி, பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, நட்சத்திர விடுதிகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் வரை வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.
குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஈரோட்டில் மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்டம் முழுதும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டு போடுவதற்காக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர்.
முதற்கட்ட தேர்தலுக்காக சென்றவர்களே இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலையொட்டி, 30,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால், தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ''ஓட்டு போட சென்ற வட மாநில தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு வரும் வரை, தொழிற்சாலைகளில் உற்பத்தி கணிசமாக பாதிக்கும். கல் குவாரி, ஹோட்டல்களிலும் பணியாளர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.