ADDED : ஏப் 26, 2024 11:46 PM

புதுடில்லி: சிறு நிதி வங்கிகள், வழக்கமான வங்கிகளாக செயல்பட நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது, இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
'எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் வங்கி' போன்ற பல சிறு நிதி வங்கிகள், இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள், வழக்கமான வங்கிகளாக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், பெரிய வங்கிகளாக செயல்பட விரும்பும், சிறு நிதி வங்கிகள், தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, ரிசர்வ் வங்கி தற்போது அழைப்பு விடுத்துள்ளது.
வழக்கமான வங்கியாக தகுதி பெற, குறைந்தபட்ச நிகர மதிப்பு, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டின் முடிவில், 1,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். வங்கியின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும்.
இது தவிர, பரிந்துரைக்கப்பட்ட சி.ஆர்.ஏ.ஆர்., விகிதம், ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பான செயல்பாடு என மற்ற சில நிபந்தனைகளும் உண்டு.

