நிலக்கரி, சிமென்டை விடுங்கள் ரயில்வேக்கு பார்லி., குழு பரிந்துரை
நிலக்கரி, சிமென்டை விடுங்கள் ரயில்வேக்கு பார்லி., குழு பரிந்துரை
ADDED : மார் 12, 2025 01:43 AM

புதுடில்லி:ரயில்வேயின் பயணியர் சேவையை போன்று, சரக்கு போக்குவரத்து சேவையையும் பல்வகைப்படுத்த வேண்டும் என்று, ரயில்வேக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து நிலைக்குழு தெரிவித்திருப்பதாவது:
சரக்குகள் சேவை பிரிவு, இந்திய ரயில்வேயின் முதுகெலும்பாக உள்ளது. இதன்படி, ரயில்வேயின் மொத்த வருவாயில் 65 சதவீத பங்களிப்பை இது வழங்குகிறது. சரக்கு இயக்கம் வாயிலாக சரக்கு ஏற்றுதல் மற்றும் வருவாய் ஈட்டலில் நிலக்கரி, இரும்பு தாது மற்றும் சிமென்டின் பங்களிப்பு 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
வருவாய் அதிகம் ஈட்டி தரும் சரக்குகள் சேவை பிரிவின் செயல்திறனை மேம்படுத்தவும், நிலக்கரி, இரும்பு தாது மற்றும் சிமென்ட் பொருட்களை தாண்டி, சரக்கு போக்குவரத்தை பல்வகைப்படுத்த ரயில்வே போக்குவரத்து நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயணியர் சேவை அமைப்பை போன்ற கூடுதல் சேவையை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.