திருப்போரூரில் கைவிடப்படும் 'அரசு' உப்பு உற்பத்தி பதிலாக 'சோலார்' மின் நிலையம் அமைக்க திட்டம்
திருப்போரூரில் கைவிடப்படும் 'அரசு' உப்பு உற்பத்தி பதிலாக 'சோலார்' மின் நிலையம் அமைக்க திட்டம்
ADDED : மே 16, 2024 01:13 AM

சென்னை:சென்னை அடுத்த திருப்போரூரில், தமிழக அரசின் உப்பு நிறுவனம், பல முறை முயற்சித்தும் உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் அங்குள்ள, 3,000 ஏக்கரில், 'டிட்கோ, சிப்காட், டான்செம், மெட்ரோ' உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, 600 மெகா வாட் திறனில் பிரம்மாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில், தமிழக அரசின் உப்பு நிறுவனத்திற்கு, உப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது.
3,010 ஏக்கர் நிலம்
இந்நிறுவனம், 'அரசு, நெய்தல்' பிராண்டில் உப்பு உற்பத்தி செய்து, ரேஷன் கடை, வெளிச்சந்தையில் விற்கிறது. தொழிற்சாலைக்கும் உப்பு விற்பனை செய்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உப்பு நிறுவனத்திற்கு, 3,010 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு, 2019ல் வழங்கியது. முதல் கட்டமாக, 500 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட இருந்தது.
கொரோனா ஊரடங்கு
இதற்காக, திருப்போரூர் அருகில் உள்ள கடல் நீரை, முட்டுக்காடு அருகில் பகிங்ஹாம் கால்வாய் வழியாக எடுத்து வந்து, அரசு வழங்கிய இடத்தில் உப்பு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, வாய்க்கால், மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டன.
கொரோனா ஊரடங்கு, கன மழையால் வாய்க்காலில் தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால், மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டும், உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை.
கடந்த ஏப்ரலிலும் உப்பு உற்பத்திக்கு ஆயத்த பணிகள் துவங்கின. கடல் நீரில், 3 டிகிரி உப்பு தன்மை இருந்தால் தான் உப்பு உற்பத்தி செய்ய முடியும்.
கடல் நீரை, திருப்போரில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்திற்கு எடுத்து வரும் போது, 1 - 1.50 டிகிரி தான் உப்பு தன்மை உள்ளது. எனவே, திருப்போரூர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகிஉள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், தொழில் துறை செயல்பாடுகள் தொடர்பாக, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று முன்தினம், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருப்போரூரில் இனியும் உப்பு செய்ய வாய்ப்பில்லை. அங்குள்ள காலி இடத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், கடலை ஓட்டிய இடத்தில் கட்டுமான பணிகளும் மேற்கொள்ள முடியாது.
சூரியசக்தி மின்சாரம்
அரசு உப்பு நிறுவனம், சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்திக்கு தேவையான மின்சாரம், மின் வாரியத்தின் வாயிலாக பெறப்படுகிறது. இதற்காக, அவற்றுக்கு அதிகம் செலவாகிறது.
எனவே, உப்பு நிறுவனத்திற்கு வழங்கிய, 3,000 ஏக்கரில், 500 - 600 மெகா வாட் திறனில் பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையத்தை, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களான, சிப்காட், டிட்கோ, டான்செம், சால்ட், மெட்ரோ ரயில், மின் வாரியம் வாயிலாக அமைக்க, தலைமை செயலர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அங்கு உற்பத்தியாகும் மின்சாரம், பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தியது போக, மின் வாரியத்திற்கு விற்கப்படும்; இதனால் அரசுக்கு வருவாயும் கிடைக்கும்.
விரைவில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.