ஒடிசா மாநில நிலக்கரி சுரங்கம் தமிழகத்திற்கு ஒதுக்க வாய்ப்பு
ஒடிசா மாநில நிலக்கரி சுரங்கம் தமிழகத்திற்கு ஒதுக்க வாய்ப்பு
ADDED : மே 03, 2024 12:37 AM

சென்னை: மத்திய அரசு நடத்திய நிலக்கரி சுரங்க ஏலத்தில், ஒடிசாவின் சகிகோபால் சுரங்கம், தமிழகத்திற்கு கிடைக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, சுரங்க துறையின் அழைப்பை எதிர்பார்த்து, மின் வாரியம் காத்திருக்கிறது.
தமிழக மின் வாரியத்திற்கு, 5,120 மெகா வாட் திறனில், ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு, தினமும் பெறப்படுகிறது.
திருவள்ளூர், துாத்துக்குடி மாவட்டங்களில் மின் வாரியம், 3,300 மெகா வாட் திறனில், மூன்று அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. அவற்றுக்கும் அதிக நிலக்கரி தேவை. மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய, இந்தாண்டு துவக்கத்தில் ஏலம் விட்டது.
ஒடிசா மாநிலத்தில், 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கத்தை பெறுவதற்கான ஏலத்தில், தமிழக மின் வாரியம் பங்கேற்றது. வேறு நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. அந்த சுரங்கம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக, சுரங்க துறை அழைப்பை எதிர்பார்த்து, மின் வாரியம் காத்திருக்கிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு சுரங்கத்திற்கு முதல் முறை ஏலம் விடும்போது, ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றால், அந்நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படாது; மறுபடியும் ஏலம் விடப்படும்.
இரண்டாவது முறை ஏலம் விடும் போதும், அதே நிறுவனம் மட்டும் பங்கேற்றால், ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி, சகிகோபால் சுரங்க ஏலத்தில், முதல் மற்றும் இரண்டாம் முறை ஏலத்தில், தமிழக மின் வாரியம் மட்டும் பங்கேற்றது.
எனவே, அந்த சுரங்கம், தமிழகத்திற்கு கிடைக்கிறது. அதை ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, சுரங்க துறையின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.