ADDED : ஆக 23, 2024 01:05 AM

புதுடில்லி,:சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனமான 'பிரீமியர் எனர்ஜிஸ்', புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,830 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதற்கான பங்கு விற்பனை,வரும் 27ம் தேதி துவங்கி 29ம் தேதி முடிவடைய உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,291 கோடி ரூபாயும், பங்குதாரர்களின் 3.42 கோடி பங்குகள் வாயிலாக 1,539 கோடி ரூபாயும் என, மொத்தம் 2,830 கோடி ரூபாய் நிதி திரட்ட பிரீமியர் எனர்ஜிஸ் முடிவு செய்துள்ளது.
ஒரு பங்கின் விலை, 427 முதல் 450 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதி, இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான 'பிரீமியர் எனர்ஜிஸ் குளோபல் என்விரான்மென்ட்' நிறுவனத்திற்கான நிதி பங்களிப்பிற்கும், ஹைதராபாதில் உற்பத்தி வசதியை மேம்படுத்துவதற்கு மற்றும் நிறுவனத்தின் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என, அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இந்நிறுவனத்தின் வருவாய், கடந்த ஜூன் காலாண்டு நிலவரப்படி, 1,669 கோடி ரூபாயாக உள்ளது. வரிக்கு பிந்தைய லாபம், 198 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 1995 ஏப்ரலில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஒருங்கிணைந்த சோலார் செல் மற்றும் சோலார் பேனல்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம், 5 ஆலைகளை கொண்டுள்ளது. இவையனைத்தும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் அமைந்து உள்ளன.