ADDED : மார் 03, 2025 07:04 AM

துாத்துக்குடி : உடன்குடி அனல் மின் நிலையம் மே மாத இறுதிக்குள் உற்பத்தியை துவங்கும் என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனல் மின் நிலைய பணிகளை, டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் அவர் தெரிவித்ததாவது: கல்பாக்கம், நெய்வேலி அனல் மின் நிலையங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் வாயிலாக, மாநிலத்தின் மின் தேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மாநிலத்திற்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, உடன்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் நிலையங்களுக்கான பணிகள், 13,077 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் அனல்மின் நிலையத்தின் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவடைந்து, மின் உற்பத்தி துவங்கும். இரண்டாவது மின் நிலைய பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அனல்மின் நிலைய கட்டுமானப் பணி முடிவு பெற தாமதமாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.