கோட்டக் ஜெனரல் பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
கோட்டக் ஜெனரல் பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
ADDED : ஜூன் 06, 2024 02:34 AM

புதுடில்லி:'கோட்டக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை விற்பதற்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா ஜெனரல், கோட்டக் மஹிந்திரா வங்கியின் காப்பீடு பிரிவாகும். இந்நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை, 5,560 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக, ஸ்விஸ் நாட்டை சேர்ந்த சுரிச் காப்பீடு நிறுவனம் முன்பு அறிவித்து இருந்தது.
சுரிச் காப்பீட்டு குழுமம், உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் சேவைகளை வழங்கி வரும் ஒரு முன்னணி காப்பீட்டு நிறுவனமாகும்.
இந்த கையகப்படுத்துதல் திட்டத்திற்கு, சி.சி.ஐ., எனும் இந்திய போட்டி ஆணையம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியும் தற்போது, பங்குகளை விற்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை, நேற்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேரத்தில், 4.89 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் 1,718.75 ரூபாயாக நிலை பெற்றது.