ADDED : ஜூலை 18, 2024 11:57 PM

பெங்களூரு:தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான கர்நாடக அரசின் வழிகாட்டுதல், விதிமுறைகளை பின்பற்ற தயார் என, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தெரிவித்துஉள்ளது.
கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு நிர்வாக பணியில் 50 சதவீதமும்; பிற பணிகளில் 75 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, கர்நாடக அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. 'நாஸ்காம்' மற்றும் பல்வேறு தொழில்துறையினரின் கடும் எதிர்ப்பால், இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறோம். எந்தவொரு விதி என்றாலும், அதற்கு எங்களின் முழு ஆதரவு உண்டு.
இந்த விவகாரம் இறுதி வடிவம் பெறுவதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. பொதுவாக, எங்கள் அணுகுமுறை புதிய சட்டங்கள், விதிமுறைகளை பின்பற்றுவதாக இருக்கும்.
இவ்வாறு கூறினார்.